18 ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி தும்பலஅள்ளி அணையில் தண்ணீர் திறப்பு

தர்மபுரி, மார்ச் 21: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே 18 ஆண்டுகளுக்கு பிறகு தும்பலஅள்ளி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 5 கிராமத்தில் உள்ள 2184 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தண்ணீர் திறப்பால் கரும்பு, நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் வட்டத்தில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. காவிரியில் வீணாகக் கலக்கும் சின்னாறு அணை உபரி நீர், அண்ணாமலை அள்ளி துருவமலை மற்றும் தாமரை ஏரியின் உபரி நீரைத் தேக்கி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில், காரிமங்கலம் அருகே கடந்த 1979ம் ஆண்டு தும்பலஅள்ளி அணையைக் கட்டும் பணியை பொதுப் பணித் துறை தொடங்கியது.

14.76 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 131 மில்லியன் கன அடி நீரைத் தேக்கும் வகையில், 7 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அணைக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை நீர்வரத்து இருக்கும். இந்த நீரைப் பயன்படுத்தி பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றியங்களில் 2,617 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்த நிலையில், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்வரத்து முற்றிலும் தடைபட்டு அணை வறண்டது. இதனால், இப்பகுதியில் விவசாயம் கேள்விக் குறியானதால் ஆயிரக்கணக்கான பேர் பிழைப்புக்காக வெளியிடங்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டது.

இப்பகுதி மக்கள் இடம் பெயர்வதைத் தடுப்பதுடன், பாசன வசதிக்கு தும்பலஅள்ளியில் தண்ணீரைத் தேக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராடினர். ஒருகட்டத்தில், எண்ணேகோல் புதூர் - தும்பலஅள்ளி அணை நீர்பாசன திட்டம் நிறைவேற்ற துரிதமாக பணிகள் நடந்தது. தற்போது இந்த திட்டம் கிடைப்பில் உள்ளது. ஆனாலும் தும்பல அள்ளி அணைக்கு நீர் வரத்து இன்றி இருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பெய்தது. குறிப்பாக கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்தது. இதில் தும்பலஅள்ளி அணை நிரம்பியது. தொடர்ந்து தண்ணீர் வரத்தால் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இருப்பால் மதகில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அணையை நம்பியிருக்கும் 7 ஏரிகளும் நிரம்பியுள்ளன.

இந்நிலையில் 18 ஆண்டிற்கு பிறகு தும்பலஅள்ளி அணையின் அருகில் கரும்பு, நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஒருபோகம் விளைச்சல் எடுத்தனர். 2வது போகம் விளைவிக்க நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சாந்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் பாபு, உதவிப் பொறியாளர்கள்  மோகனப்பிரியா, மாலதி, காரிமங்கலம் வட்டாட்சியர் சுகுமார், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, திமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பொம்மஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர்  தீர்த்தகிரி, விவசாய சங்க பிரதிநிதிகள் கோவிந்தராஜ், ராஜா, மணி, முருகன் உள்ளிட்ட விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி கூறுகையில், கடந்த 2005ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் தும்பலஅள்ளி அணை நிரம்பியது. தும்பலஅள்ளி நீர்த்தேக்க ஆயக்கட்டுதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2617 ஏக்கரில் புதிய ஆயக்கட்டு பகுதிகள் 2184 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நாள் ஒன்று 20.81 மில்லியன் கன அடி வீதம் 35 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டும், அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும் முறை வைத்து பாசனத்திற்கு மொத்தம் 89.30 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காரிமங்கலம் ஒன்றியம் கொட்டுமாரனஅள்ளி கிராமத்தில் 791.57 ஏக்கர், நாகனம்பட்டி கிராமத்தில் 622 ஏக்கர், கெரகோடஅள்ளி கிராமத்தில் 654.80 ஏக்கர், காரிமங்கலத்தில் 88.80 ஏக்கர், அடிலம் கிராமத்தில் 26.62 ஏக்கர் என மொத்தம் 2184 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. அறிவிக்கப்பட்ட நான்கு நணைப்புக்கு பிறகு எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படமாட்டாது என்றனர்.

Related Stories: