மாவட்டத்தில் 23,402 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில், கொரோனா கால கட்டத்தில் கற்றலின் இழப்பை சீர் செய்யும் வகையில் எண்ணும்-எழுத்தும் மூலம் மாணவர்களுக்கு பாடல், நாடகம், பொம்மலாட்டம் மூலம் சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது, குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காண, கடந்த ஆண்டு எண்ணும்-எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. 2025ம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை உள்ள 8வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெறவேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். குழந்தைகள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும். அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் வளர்த்தெடுப்பதில் எண்ணும் எழுத்தும் திட்டம் முக்கியப் பங்கை வகுக்கிறது. கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை, மக்களிடமும் முக்கியமாக பெற்றோர்களிடமும் கொண்டு செல்ல ”எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்” என்ற நிகழ்ச்சி, அனைத்து மாவட்டங்களிலும் துவங்கி நடைபெற்ற வருகிறது.

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தைகளின் கற்றல் அடைவுகளை கொண்டாடவும் நேற்று(19ம் தேதி) நல்லம்பள்ளி வட்டார வள மையம் அருகே, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் எண்ணும் எழுத்தும் பரப்புரை வாகனத்தை கலெக்டர் சாந்தி துவங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மான்விழி, உதவித் திட்ட அலுவலர்  சம்பத்குமார் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த பரப்புரை வாகனம் மூலம் பாப்பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், காரிமங்கலம் வட்டார வள மையத்திலும், தர்மபுரி நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளியிலும், தர்மபுரி நகர பேருந்து நிலையத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மான்விழி கூறியதாவது: கொரோனா கால கட்டத்தில், மாணவர்களுக்கு கற்பித்தலில் ஏற்பட்ட இழப்பை, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்தில் பாடம் நடத்த முடியாத சூழ்நிலையால் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், அப்படியே மாற்று வகுப்பில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் கற்றலில் தெளிவு இல்லாமல் இருப்பது அறியப்பட்டது. இதையடுத்து, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தை புரிந்து படிக்கும் வகையில், உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில் 23,402 மாணவ- மாணவிகள் பயனடைவார்கள். அரும்பு -மொட்டு-மலர் என மூன்று வகையாக பிரித்து கற்பிக்கப்படுகிறது. ஒன்றும் தெரியவில்லை என்றால் அரும்பு, கொஞ்சம் தெரியும் என்றால் மொட்டு, தெரியும் என்றால் மலர் என்ற வகைகளாக பிரித்து இந்த திட்டத்தில் பாடம் கற்பிக்கப்படுகிறது. புத்தகம் இன்றி ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் முலம் கற்பிக்கப்பட உள்ளது. மாணவர்கள் பயமின்றி பேசுவதற்கு பள்ளியில் சிறிய மேடை அமைத்து, ”என் மேடை- என் பேச்சு” என்ற தலைப்பில் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: