24 ஆண்டுகளாக சிக்காத தொழிலாளி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

தர்மபுரி, மார்ச் 19: வரதட்சணை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள கூலி தொழிலாளி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி அருகே ராஜாபேட்டை கான் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி(எ) முனியப்பன். கூலி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மலர்(21) என்பவருக்கும் இடையே கடந்த 1.4.1998ம் ஆண்டு அதியமான்கோட்டையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில நாட்களிலேயே மலரை கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தர்மபுரி மகளிர் காவல் நிலையத்தில் மலர் புகார் தெரிவித்தார். இதன்பேரில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ரவி மற்றும் அவரது தந்தை கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் பெற்றனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், ரவி ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். இதற்கிடையே அவரது தந்தை கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து, தலைமறைவான ரவியை மகளிர் போலீசார் பல ஆண்டுகளாக தேடி வந்தனர்.  இந்நிலையில், தர்மபுரி கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் ரவியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். ரவி குறித்த விபரங்களுடன் உள்ள பிட்நோட்டீஸ்களை பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்டு, நான்குரோடு, திருமண மண்டபங்கள், முக்கிய சந்திப்புகளில் ஒட்டி வைத்துள்ளனர். அதில், ரவி இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்குவதோடு, தகவல் கொடுப்பவர் விபரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: