பிளஸ்2 தமிழ் தேர்வில் 2,680 பேர் ஆப்சென்ட் பள்ளி வாரியாக மாணவர்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

தர்மபுரி, மார்ச் 18: தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்2 தமிழ் தேர்வில் 2,680 பேரும், பிளஸ்1  தமிழ் தேர்வில் 2815 பேரும் ஆப்சென்ட் ஆனதால், பள்ளி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வீடு, வீடாக சென்று, மாணவர்களை அடுத்த தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ்1 அரசு பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, 3 உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, 1 சமூக நலத்துறையின் மேல்நிலைப்பள்ளி, 5 சுய நிதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளைச் சேர்ந்த 22,301 பேரில், 19,620 பேர் தமிழ் தேர்வு எழுதினர். இதில் ஒருவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 2,680 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதே போல், ஆங்கிலத் தேர்வில் 2800 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

பிளஸ்1 பொதுத்தேர்வில் 179 பள்ளிகளைச் சேர்ந்த 22,780 பேரில், 19,479 பேர் தமிழ் தேர்வு எழுதினர். 2,801 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும், ஆங்கிலத்தேர்வை 2837 பேர் எழுத வரவில்லை. தேர்வெழுத வராதவர்களில் பெரும்பாலும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே அதிகமுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் சராசரி 7 முதல் 10 மாணவர்கள் வரை தேர்வு எழுத வரவில்லை என தெரியவந்துள்ளது. பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நேற்று நடந்தது. இதிலும் 856 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. எஞ்சியுள்ள தேர்வுகளை அனைத்து மாணவர்களையும் எழுத வைக்க முயற்சி நடந்து வருகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் தேர்வை 2,680 பேரும், ஆங்கிலத் தேர்வை 2800 பேரும் எழுதவில்லை. இதே போல், பிளஸ்1 தமிழ் தேர்வை 2815 பேரும், ஆங்கிலத்தேர்வை 2837 பேரும் எழுதவில்லை. தேர்வு எழுத வராத அனைத்து மாணவ, மாணவிகளையும், தேர்வு எழுத வைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராத மாணவர்களை, ஆசிரியர்கள் பட்டியல் தயாரித்து வீடி தேடிச்சென்று பள்ளிக்கு அழைத்து வந்து, சிறப்பு வகுப்பு நடத்தி உடனடி தேர்வு எழுத நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த உடனடி தேர்வு ஜூன் மாதம் நடக்கிறது.

தற்போது தேர்வு எழுத வராத மாணவ, மாணவிகளை உடனடி தேர்வுகளில் பங்கேற்க, பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி மேலாண்மை குழு கூட்டம், பெற்றோர் ஆசிரியர்கள் குழு கூட்டம் விரைவில் நடத்தி, தேர்வுக்கு வராத மாணவ, மாணவிகளை கண்டறிந்து, ஜூன் மாதம் வரும் உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக வரும் 24ம் தேதியும், ஏப்ரல் 10ம் தேதியும், 24ம் தேதியும் 3 கூட்டம் நடத்தி, தேர்வுக்கு வராத மாணவர்களை தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூகுள் மீட்டிங் நடத்தினார். அதில் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதில், தேர்வுக்கு வராத மாணவர்களை அடையாளம் காண உத்தரவிட்டுள்ளார். கலெக்டர், காவல்துறை, வருவாய்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, பட்டியல் தயாரித்து வீடு, வீடாக சென்று அடையாளம் காணவேண்டும். பின்னர் அந்த மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து ஏப்ரல், மே மாதங்களில் சிறப்பு வகுப்பு நடத்தி, ஜூன் மாதம் உடனடி தேர்வு தயார்படுத்த உள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: