வசதிகள்

தர்மபுரி, மார்ச் 18: தர்மபுரி ஒன்றியத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ₹5.70 கோடியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள 2006 முதல் 2011 வரை ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தலா ₹20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டம் 2ம் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் நீர்நிலைகளை புனரமைத்தல், குக்கிராமங்களின் தெருக்களை மேம்படுத்துதல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு ஏற்படுத்தல், பரிந்துரைக்கப்பட்ட மயானங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்துல், பசுமை மற்றும் சுத்தமான கிராமம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதலை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

 தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குள் அதகப்பாடி, அக்கமனஅள்ளி, ஆண்டிஅள்ளி, அ.கொல்லஅள்ளி, அளேதர்மபுரி, கடகத்தூர், கொண்டம்பட்டி, கொண்டகரஅள்ளி, கோணங்கிநாய்க்கனஅள்ளி, கோடுஅள்ளி, கிருஷ்ணாபுரம், குப்பூர், இலக்கியம்பட்டி, மூக்கனூர், நாய்க்கனஅள்ளி, கே.நடுஅள்ளி, நல்லசேனஅள்ளி, நூலஅள்ளி, புழுதிக்கரை, செம்மாண்டகுப்பம், செட்டிக்கரை, சோகத்தூர், திப்பிரெட்டிஅள்ளி, உங்குரானஅள்ளி, வெள்ளாளப்பட்டி, வெள்ளோலை, வி.முத்தம்பட்டி, முக்கல்நாய்க்கன்பட்டி ஆகிய 28 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்த 2020-21ம் ஆண்டில், அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திப்பிரெட்டிஅள்ளி, நாய்க்கனஅள்ளி, கொண்டகரஅள்ளி, கொண்டம்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி, இலக்கியம்பட்டி, நூலஅள்ளி, செட்டிக்கரை, சோகத்தூர் ஆகிய ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை, தெருவிளக்கு, மயான மேம்பாடு ஆகிய பணிகளுக்கு தலா ₹30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்துள்ளன.  

இதே போல், 2021-22ம் நிதியாண்டில் அதகபாடி, அளேதர்மபுரி, புழுதிக்கரை, வெள்ளோலை, உங்குரானஅள்ளி ஆகிய ஊராட்சிகளிலும், 2023-24 நிதியாண்டில் கடகத்தூர், கிருஷ்ணாபுரம், குப்பூர், நல்லசேனஅள்ளி, அ.கொல்லஅள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளிலும் தலா ₹30லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 3 நிதியாண்டிலும், இதுவரை 19 ஊராட்சிகளுக்கு தலா ₹30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ₹5.70 கோடி மதிப்பில், மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. இத்தகவலை ஒன்றிய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: