சட்டவிரோத மின்வேலியை கண்டுபிடிக்க குழு அமைப்பு

தர்மபுரி, மார்ச் 16: மாரண்டஅள்ளி அருகே 3 யானைகள் பலியானதையடுத்து, சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க  வனத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறையினர் இணைந்து குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வனம் மற்றும் மலையை ஒட்டிய விளைநிலங்களில், காட்டுப்பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் வராமல் இருக்க, அனுமதி இல்லாமல் மின்வேலி அமைக்கப்படுகிறது. இவ்வாறு பாலக்கோடு வனச்சரகத்தில் மாரண்டஅள்ளி காளிகவுண்டனூர் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன், மின்வேலி அமைத்த தோட்டத்தில் 3 யானைகள் சிக்கி பலியாகின. கடந்த சில மாதங்களுக்கு முன், மாரண்டஅள்ளி அருகே ஒரு மக்னா யானை மின்வேலியில் சிக்கி பலியானது. அதே போல், தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற ஒரு விவசாயியும், மின்வேலியில் சிக்கி பலியானார். எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் நடக்காமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி, மின்வேலியில் சிக்கி பலியாகும் சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சாரத்துறை இணைந்து ஆலோசனை கூட்டம், தர்மபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில், சட்டவிரோத  மின்வேலிகள் அமைக்கப்பட்டது தெரியவந்தால், மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். சட்டவிரோத மின்வேலியில் சிக்கி, வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று மின்சாரத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை கொண்ட குழுவினர், மாரண்டஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள வன பகுதிகளின் அருகில் உள்ள விளை நிலங்களில் அனுமதியின்றி மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், மின் கம்பிகள் ஏதேனும் தொய்வாக செல்கிறதா, கொக்கி போடப்பட்டுள்ளதா என்பதையும், மின் வாரிய பொறியாளர் அருள்முருகன் மற்றும் வனவர் முருகானந்தம் தலைமையில் மின் வாரிய பணியாளர்கள் குழுவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, அனுமதியின்றி மின்வேலி அமைப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தண்டனைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் யானை நடமாட்டம் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சரகத்தில் மட்டும் வனத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறையினர் கொண்ட குழு அமைத்து, சட்டவிரோத மின்வேலி அமைப்பு குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மாரண்டஅள்ளி அருகே, கடந்த 6ம் தேதி மின்கம்பத்தின் கம்பியிலிருந்து திருட்டுத்தனமாக, நேரடியாக கொக்கி மூலம் மின் இணைப்பு பெற்று, சட்டவிரோத மின்வேலி அமைத்திருந்த வேலியில் சிக்கி, 3 யானைகள் பலியானது. இதனையடுத்து, சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வேலிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க, தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வனத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறையினர் உள்ளனர். இவர்கள் வனம், மலை ஒட்டிய பகுதிகளில் திருட்டு தனமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். முதல்கட்டமாக யானைகள் அதிகம் நடமாடும் பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனச்சரகத்தில் இக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது,’ என்றனர்.

Related Stories: