485 பயனாளிகளுக்கு ₹2.81 கோடி நல உதவிகள்

தர்மபுரி, மார்ச் 16: அரூர் அருகே நடந்த மக்கள் தொடர்புத்திட்ட முகாமில், 485 பயனாளிகளுக்கு ₹2.81 கோடி மதிப்பிலான நலஉதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். அரூர் தீர்த்தமலை உள்வட்டம், டி.ஆண்டியூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்து, 485 பயனாளிகளுக்கு ₹2.81 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ‘மிகவும் பின்தங்கிய கிராமமான டி.ஆண்டியூரில் வசிக்கும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது. கடந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சுமார் 100 ஹெக்டர் பரப்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்கள் மற்றும் ஏற்கனவே பரிசீலனையில் உள்ள மனுக்கள் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும்,’ என்றார்.முகாமில், 485 பயனாளிகளுக்கு ₹2 கோடியே 80 லட்சத்து 90 ஆயிரத்து 18 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், அரூர் வருவாய் கோட்ட அலுவலர் (பொ) ராஜசேகரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் யசோதா, அரூர் ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், துணை தலைவர் அருண், ஒன்றிய குழு உறுப்பினர் பாப்பாத்தி, அரூர் தாசில்தார் பெருமாள், வேடகட்டமடுவு ஊராட்சி மன்ற தலைவர் ராணிமுத்து உட்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: