காரிமங்கலம், மார்ச் 15: காரிமங்கலம் அருகே ஏரி வேலைக்காக சென்ற தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியாம்பட்டி முதல் நிலை ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூலாபட்டி, சுக்கன் ஏரி பகுதியில் குட்டை மற்றும் குளம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, நேற்று தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பெண் பயனாளிகள், பூலாபட்டி ஏரிக்கரை பகுதியில் குட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒருவர், இந்த பகுதி தனக்கு சொந்தமானது என கூறினார். மேலும், பணி செய்யக்கூடாது என தடுத்து தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், பிடிஓக்கள் ரவி, கலைவாணி, தாசில்தார் சுகுமார் ஆர்ஐ கவிப்பிரியா, விஏஓ முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளவீடு செய்தனர். இதில், முழுக்க முழுக்க அரசு நிலத்தில் தான் ஏரி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தகராறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல், சுக்கன் ஏரி பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்திருந்த நிலையில், குளம் அமைக்க சென்ற பயனாளிகளிடம் தகராறு செய்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு சென்ற பஞ்சாயத்து தலைவரையும் ஒருமையில் பேசியுள்ளார். அதனை தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் கண்டித்ததால், ஆக்கிரமிப்பாளர் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.