அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி அருகே சோகத்தூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கலெக்டர், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தார். தர்மபுரி சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் நாளை(16ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதனையொட்டி, ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இதில் மாவட்ட எஸ்பி ஸ்டிபன்ஜேசுப் பாதம் ,கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி தர்மபுரி சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் 16ம் தேதி(நாளை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி இப்போட்டி நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும், பெரும் பங்கு வகிப்பதால், ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6நபர்கள் வருவது வழக்கம். காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு, ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. காளைகளை பதிவு செய்யும்போது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும், தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.

Related Stories: