எழுத்தறிவு திட்ட தேர்வு மையத்தை அதிகாரி ஆய்வு

தர்மபுரி, மார்ச் 13: பென்னாகரம் வட்டாரத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் தேர்வு மையத்தை, மாநில ஒருங்கிணைப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், பள்ளி சாரா, வயதுவந்தோர் கல்வி இயக்கம், அனைத்து கிராமங்களிலும் தன்னார்வலர்களைக் கொண்டு, எழுத படிக்கத் தெரியாத மக்களுக்கு எழுத்தறிவையும், எண்ணறிவையும் கற்பித்து வருகிறது. பென்னாகரம் வட்டாரத்தில் 166 மையங்கள் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் கல்வி பயின்று வருபவர்களுக்கு, வரும் 19ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், பென்னாகரம் அருகே செங்கனூர் ஊராட்சி, சின்னபள்ளத்தூர் அரசுப்பள்ளியில் உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை, மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக ஒருங்கிணைப்பாளர் எமியம்மாள் சோபியா செல்வகுமாரி பார்வையிட்டு, கல்வி பயில்பவர்களிடம் கலந்துரையாடினார். இத்திட்டத்தில் எழுத, படிக்கத் தெரியாத மக்களுக்கு, மாலை நேரங்களில் அல்லது அவர்கள் விருப்பப்பட்ட நேரங்களில், தன்னார்வலர்கள் பயிற்சி அளித்து வருவதால், எழுத்தறிவில்லாத நிலை உருவாக்கப்படும். கிராமங்களில் குறைந்தபட்சம் கையெழுத்து போடுவதற்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: