தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். முன்னாள் எம்பியும், தலைமை செயற்குழு உறுப்பினருமான எம்ஜி சேகர், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் உமாசங்கர், ரேணுகாதேவி, ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏலகிரி நடராஜ், சரஸ்வதி துரைசாமி, சோலை மணி, வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தடங்கம் சுப்ரமணி கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாளை தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சிறப்பாக கொண்டாட வேண்டும். விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் கொடி ஏற்றியும், ஏழை எளியோர், ஆதரவற்றோர், மாணவ,-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கியும், நல்ல உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும். என்றார். தொடர்ந்து பிரமாண்ட கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
