குண்டலப்பட்டியில் அரசு பள்ளி கட்டிடம் கட்ட மாற்று இடம் வேண்டி மனு

தர்மபுரி, பிப்.28: மொரப்பூர் அருகே குண்டலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட மாற்று இடம் தேர்வு செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். மொரப்பூர் அருகே குண்டலப்பட்டியைச் சேர்ந்த அரசு நடுநிலைப்பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மொரப்பூர் ஒன்றியம், ஜக்குப்பட்டி ஊராட்சி குண்டலப்பட்டி கிராமத்தில், சுமார் 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் இடித்து விட்டனர். வகுப்பறை கட்டிடம் இருந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என்பதால், அதே இடத்தில் மீண்டும் பள்ளி வகுப்பறை கட்ட இடத்தின் உரிமையாளர் அனுமதி மறுக்கிறார். எங்கள் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் அரசு பள்ளி கட்டிடத்தை கட்டினால் எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக, பள்ளி கட்டிடத்திற்கு புதிய இடத்தை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை துவங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: