மாணவர்கள் போராட்டம் எதிரொலி தூத்துக்குடியில் இருந்து கலைஞானபுரம் வழியாக குளத்தூருக்கு அரசு பஸ் இயக்கம்

குளத்தூர், பிப். 22: கலைஞானபுரம், துலுக்கன்குளம் கிராம மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக தூத்துக்குடியில் இருந்து கலைஞானபுரம் வழியாக குளத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். வைப்பார் பஞ்சாயத்திற்குட்பட்ட கலைஞானபுரம் மற்றும் துலுக்கன்குளம் கடலோர கிராமங்களை சேர்ந்த 65 மாணவ- மாணவிகள், குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இக்கிராமங்களில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் சுமார் 3 கிமீ தூரம் கலைஞானபுரம் விலக்கு பகுதிக்கு சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

கிழக்கு கடற்கரை சாலையில் இயக்கப்படும் பேருந்துகள் விரைவு பேருந்துகளாக இருப்பதால் அவை கலைஞானபுரம் விலக்கில் நின்று செல்வதில்லை. இதில் காலை 8 மணிக்கு முதுகுளத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பேருந்தும், காலை 8.30 மணிக்கு சாயல்குடியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தும் கலைஞானபுரம் விலக்கில் நின்று செல்லும். ஆனால் கிராம பகுதிகளில் இந்த பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி வருவதால் தினந்தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

அதேபோல் மாலை 5 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் அரசு பேருந்து மட்டும் கலைஞானபுரம் விலக்கில் நின்று செல்லும். இந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் படியில் நின்றுதான் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இந்த கடலோர கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த 20ம் தேதி முதல் கலைஞானபுரம், துலுக்கன்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பள்ளி செல்வதை புறக்கணித்து வீட்டிலிருந்து பாடங்களை படிக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் காலை மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லாமல் தங்களது பாடப்புத்தக பைகளை கொண்டு வந்து வீதிகளில் அமர்ந்து பாடங்களை படித்தனர். தகவலறிந்த குளத்தூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 நாட்களுக்குள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி பஸ் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உறுதியளித்தார். இதையேற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் போலீசார் ஏற்பாடு செய்த வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர், வேடநத்தம் வழியாக குளத்தூர்  செல்லும் பஸ்சை கலைஞானபுரம், துலுக்கன்குளம் கிராமம் வரை இயக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு  கலைஞானபுரம், துலுக்கன்குளம் கிராமத்திற்கு சென்ற பஸ்சை பொதுமக்கள்  மாலையிட்டு வரவேற்றனர். மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக  பஸ்சை இயக்க உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்  மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: