தர்மபுரி ஜி.ஹெச்சில் 1000 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் இணைப்பு

தர்மபுரி, செப்.24: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, 1000 படுக்கைக்கு ஆக்சிஜன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனை, கடந்த 2008ம் ஆண்டு, அப்போதைய திமுக ஆட்சியில் 500 படுக்கை வசதிகளுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 1100 படுக்கையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 28 துறை சார்ந்த சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன. தினசரி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 950க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை தனியார் நிறுவனத்திடமிருந்து சிலிண்டரில் வாங்கி பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுக்கு முன்பு, போதிய ஆக்சிஜன் இல்லாமல் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், கொரோனா பரவல் காலத்தின் போதும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ₹1.50 கோடி மதிப்பில், பிஎஸ்ஏ என்ற ஆக்சிஜன் யூனிட், மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டது. இந்த பிளாண்ட் இயற்கை சூழலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து சேமித்து வழங்க கூடியதாகும். ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு, தினசரி 1000 கிலோ திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. மேலும், தனியாரிடம் இருந்து வாங்கப்படும் ஆக்சிஜனும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தீவிர மற்றும் அவசர சிகிச்சை பெற நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், எப்போதும் ஆக்சிஜன் தேவையாக உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் நிலவிய ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனை வளாகத்தில், கடந்த ஆண்டு ₹1.50 கோடியில் ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கப்பட்டது. இது முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. தினசரி 1000 கிலோ திரவ ஆக்சிஜன் அரசு மருத்துவமனைக்கு தேவைப்படுகிறது. தனியாரிடமும் வாங்கப்படுகிறது. எதிர்காலத்தில் தனியாரிடம் வாங்குவதை தவிர்க்கும் வகையில், மகப்பேறு கட்டிடம் அருகே, ₹50 லட்சம் மதிப்பில் மேலும் ஒரு ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து இது பயன்பாட்டிற்கு வரும்.

ஏற்கனவே இருக்கும் ஆக்சிஜன் பிளாண்டில் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் 13 ஆயிரம்(13 கிலோ லிட்டர்) லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போது, புதியதாக அமைக்கப்பட்டுள்ள யூனிட் 6 ஆயிரம்(6 கிலோ லிட்டர்) லிட்டர் கொள்ளளவு கொண்டது. புதிய ஆக்சிஜன் பிளாண்டில் ஆக்சிஜன் சேமித்து வைத்து, 200 படுக்கை கொண்ட மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் வார்டுக்கு மட்டும் தனியாக சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் 600 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் வழங்க குழாய் அமைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அதனை உயர்த்தி 1000 படுக்கைகளுக்கும் நேரடியாக ஆக்சிஜன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு எந்த பிரச்னையும் இன்றி, தாராளமாக ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: