கோவை மாநகராட்சி பகுதியில் தெருநாய் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

கோவை, செப்.22: மனிதர்களின் காவலன், நன்றியுள்ள ஜீவன் என நாய்கள் அழைக்கப்படுகின்றன. இந்த நாய்கள் பல நேரங்களில் மனிதர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள், வீடற்ற நாய்கள் என அனைத்திற்கும் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படலாம். இந்த ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மனிதர்களின் உயிருக்கே ஆபத்து. இது தவிர, ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட நாயை குணப்படுத்தவும் முடியாது. அதற்கு என தனியாக சிகிச்சையும் இல்லை. எனவே, கருணை கொலை செய்வதுதான் நல்லது என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடைக்கு பால் வாங்க சென்றபோது 2 தெருநாய்கள் சிறுமியை கடித்து குதறியது. அவருக்கு மூன்று முறை தடுப்பூசி செலுத்தியும், அவரின் உடல்நிலை மோசமடைந்தது. பரிசோதனையில் சிறுமிக்கு ரேபிஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், மூளையில் பரவிய வைரஸ்களால் சிறுமி உயிரிழந்தார். கேரளாவில் நடப்பாண்டில் மட்டும் 20 பேர் ரேபிஸ் வைரஸ் பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இவர்கள் பல முறை ரேபிஸ் நோய்க்கு ஊசி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை மாநிலத்தில் தெருநாய்கள் மனிதர்களின் உயிருக்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

இவை, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரம் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும் நபர்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோரை விரட்டி, விரட்டி துரத்தி கடிக்கிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள பல தெருக்களில் உள்ள வீடற்ற நாய்கள் வெறிநாயாக மாறி சுற்றி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி சார்பில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். தடுப்பூசி போட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

பொதுவாக ஒரு நாய் தனது வாழ்நாளில் 30 குட்டிகள் வரை போடுகிறது. இதில், 10 குட்டிகள் இறக்கின்றன.

20 குட்டிகளில் 10 ஆண், 10 பெண் என்ற விகிதத்தில் இருக்கிறது. இந்த வீடற்ற நாய்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பலர் உணவளித்து பாதுகாக்கின்றனர். ஆனால், அதற்கு சரியான நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்துவதில்லை. இதனால், தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது போன்ற ரேபிஸ் பாதித்த நாய்கள் மனிதர்களை தாக்கும்போது அவர்களுக்கும் ரேபிஸ் நோய் பரவுகிறது. கோவை புலியகுளம் பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் அதிகளவில் சுற்றி வருவதாக தெரியவந்துள்ளது. புலியகுளம் ராஜீவ்காந்தி நகர், ஏரிமேடு, அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மட்டும் 6 தெருநாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த நாய்களுக்கு கோவை மற்றும் திருப்பூரில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ரேபிஸ் பாதிப்பை கால்நடை டாக்டர்கள் உறுதி செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் புலியகுளம் பகுதியை சேர்ந்த நபரை ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய் கடித்துள்ளது. அவர் தற்போது தடுப்பூசி செலுத்தியுள்ளார். தன்னை கடித்த நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பதை தெரிந்த நபர் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகிறார். புலியகுளம் பகுதியில் மட்டும் 6 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சியின் பல்வேறு தெருக்களில் சுற்றி வரும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட நாயை மட்டும் அல்ல ரேபிஸ் நோய் மனிதனை தாக்கினாலும் அவரையும் காப்பாற்ற முடியாத சூழல் இருந்து வருகிறது. எனவே, தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ம் தேதி உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கோவை மாநகராட்சி பகுதியில் நாய்களுக்கு சிறப்பு ரேபிஸ் தடுப்பூசி முகாம் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி முகாமின்போது தெரு நாய்களின் நிலையை கவனத்தில் கொண்டு அதற்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக தற்போது எழுந்துள்ளது.

Related Stories: