விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்

தர்மபுரி: மாணவர்கள் நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்று, அறியப்படாத வீரர்களை நாம் அறிந்து அவர்களை போற்ற வேண்டும் என, கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். தர்மபுரி அருகே உள்ள ஏர்ரப்பட்டியில், இந்திய சுதந்திர தின அமுத பெருவிழா மற்றும் இல்லம் தோறும் மூவர்ணக் கொடியேற்றுதல், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அறியப்படாத வீரர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:

    

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் இன்று (13ம்தேதி) முதல் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அரியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை, நாம் அறிந்து அவர்களை போற்ற வேண்டும். பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பதுடன், நமது நாட்டின் அறிவு சார்ந்த வளர்ச்சிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மாணவ, மாணவிகள் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்று, அறியப்படாத வீரர்களை நாம் அறிந்து அவர்களை போற்ற வேண்டும்.

நமது தேசியக்கொடி மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், அஞ்சலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிடைக்கிறது. இதைப்பெற்று அனைவரும், அனைத்து பகுதிகளிலும் நமது தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவிகள் தேசியக் கொடியை ஏந்தியவாறு கிராம மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், கள விளம்பர அலுவலர் பிபின் எஸ் நாத், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் கௌரம்மாள், கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: