சின்னாறு அணையில் இருந்து 450 கனஅடி உபரி நீர் திறப்பு

பாலக்கோடு, ஆக.6: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, விநாடிக்கு 450 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.  தொப்பையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளித்துக் கொண்டிருந்தவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

தர்மபுரி  மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள சின்னாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை  பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சின்னாறு அணை, தனது முழு கொள்ளளவான 50 அடியில், தற்போது 45 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1,050 கனஅடியாக உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, நேற்று காலை முதல் விநாடிக்கு 450 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரியாற்றில் கலக்கிறது. சின்னாறு அணை தற்போது 27வது முறையாக நிரம்ப உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தொப்பூர் மணியக்காரனூரைச் சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர், தனது நண்பர்களுடன் பெரும்பாலை பகுதியில் உள்ள தொப்பையாற்றில் நேற்று முன்தினம் குளித்து கொண்டிருந்தார். திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், செந்தில்குமார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும், முடியாததால், பெரும்பாலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட செந்தில்குமாரை சடலமாக மீட்டனர். சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பெரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: