நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்

திருப்பூர், ஜூன்  25: நாச்சிபாளையத்தில்  சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திருப்பூர் காங்கயம் ரோடு பொதுமக்கள் நேற்று அப்பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட வண்ணாந்துறைப்புதூர் கிராமம் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் குடிநீரும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களோடு திருப்பூர்-காங்கயம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த அவிநாசிபாளையம் போலீசார், தெற்கு வட்டாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: