மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு

தர்மபுரி, ஜூன் 14: தர்மபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின், நேற்று 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, மாணவ, மாணவிகள் உற்சாகமாக வந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.    

தர்மபுரி மாவட்டத்தில் 935 தொடக்கப்பள்ளிகள், 325 நடுநிலைப்பள்ளிகள், 166 உயர்நிலைப்பள்ளிகள், 189 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,615 அரசு பள்ளிகள் உள்ளன. சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இருந்தாலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வும், 10, 11 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடந்தது. பின்னர் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதில் 10, 11 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தவிர 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை ஆல் பாஸ் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் பூ கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

 சில தனியார் பள்ளிகளில், பள்ளியின் நுழைவாயிலில் வாழைமரம், பலூன்கள் கட்டி வைத்து மாணவர்களை வரவேற்றனர். புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டாலும், ஒருவாரத்திற்கு புத்துணர்வு பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பாடங்கள் நடத்தாமல் நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வரும் வாரத்தில் இருந்து அட்டவணைப்படி பாடங்கள் நடத்தப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொப்பூர் அருகே உள்ள உம்மியம்பட்டியில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று முதல் நாளிலேயே, 42 மாணவர்கள் சேர்ந்தனர். புதியதாக சேர்க்கைக்கு வந்த மாணவர்களை, பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். அதேபோல், ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், முதல் நாள் வகுப்பிற்கு வந்த மாணவர்களை தலைமையாசிரியர் தங்கவேல் மற்றும் ஆசிரியர்கள் கை குலுக்கி வரவேற்றனர். அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் அறிவுரைகளை கூறி வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தனர். கடகத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு, பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் நற்சுவை சுகுமார் தலைமையில், ஆசிரியைகள் ஆசிரியைகள் உமாராணி, ரமாதேவி, தங்கசெல்வி, ரமா ஆகியோர், பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பென்னாகரம்: பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் சுப்பிரமணியன், உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன், தமிழாசிரியர் முனியப்பன், உதவி தலைமையாசிரியர் லில்லி, தமிழாசிரியர் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கினர்.

போக்குவரத்து நெரிசல்

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை, மாலை நேரங்களில் பஸ், ஆட்டோ, பைக் போன்றவற்றில் அதிகமாக மாணவர்கள் பயணித்தனர். மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பள்ளி பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால், தர்மபுரி நகரில் எஸ்வி ரோடு, நான்கு ரோடு, பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். ஆனாலும், வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.

Related Stories: