சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை

தர்மபுரி, ஜூன் 9: தர்மபுரி அருகே உள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்தது தொடர்பாக, செல்போன் டவரில் பதிவான எண்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியில், தமிழ்நாடு கிராம வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளர் உள்பட 6 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை வங்கியின் மேலாளர் சுரேஷ் (37), நகைகள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு பெட்டக அறைக்கு சென்றபோது, அங்குள்ள ஆவணங்களில் மண் துகள் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், ஆவணங்களை அகற்றி விட்டு பார்த்த போது, சுவற்றில் துளை போடப்பட்டு, அதை மறைப்பதற்காக வெளிப்புறத்தில் அட்டையால் அடைத்து வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வங்கியில் எந்த பொருட்களும் களவு போகவில்லை. வங்கியில் இருந்த 5,000 பவுன், ₹20 லட்சம் பணம் மற்றும் அனைத்து பொருட்களுமே அப்படியே இருந்தது.

இதுபற்றி வங்கி மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அரூர் டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுவற்றில் துளை போட்ட மர்ம நபர்கள், மற்றொரு நாளில் வந்து கொள்ளையடிக்கும் திட்டத்தால், துளையை அட்டையால் அடைத்துச்சென்றது தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில், மர்ம நபர்கள் சுவற்றில் துளை போட்டுள்ளனர். இதனால் அன்றைய தினம், அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், அரூர் அடுத்த ஈச்சம்பாடி கிராம வங்கியில் இதேபோல் ஒரு கொள்ளை சம்பவம் நடந்ததால்,அதே கும்பல் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories: