பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்தால் கூடுதல் லாபம் பெறலாம்

தர்மபுரி, ஜூன் 9: தர்மபுரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவசங்கரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான பயறுவகை பயிர்களில், துவரையில் கோ-8, எல்ஆர்ஜி-41 ரகங்களும், பாசிப்பயிரில் கோ-8 ரகம், உளுந்து பயிரில் வம்பன்-8 மற்றும் வம்பன்-10 ரகங்களும், காராமணியில் கோ(சி.பி)-7 மற்றும் வம்பன்-3 ஆகிய ரகங்களும், தேவையான அளவு அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவைப்படும் பயறு வகை ரகங்களை, வேளாண் துறை அலுவலர்களை அணுகி மானிய விலையில் பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம். பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்து, தரமான விதை உற்பத்தி செய்து வேளாண்மை துறைக்கு வழங்கினால் உற்பத்தி மானியம் சேர்த்து கூடுதல் லாபம் கிடைக்கும். எனவே, பயறு வகை விதைப்பண்ணை அமைக்க முன்வரும் விவசாயிகள், அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் உதவி விதை அலுவலரை அணுகி துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் காராமணி பயிர்களுக்கு உண்டான வல்லுநர் மற்றும் ஆதார விதைகளை பெற்று, ஆதாரம் மற்றும் சான்று விதைப்பண்ணைகளை அமைத்து பயன் பெறலாம். இதன் மூலம் இரு மடங்கு உற்பத்தியையும், விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் கிடைப்பதால் மும்மடங்கு வருமானமும் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: