மின்கம்பம் அமைப்பதில் பிரச்னை மறியல் செய்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு

தர்மபுரி, ஜூன் 6: தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டியில் உள்ள ராயல் நகரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதை ஒட்டியுள்ள விஜயா நகரில் வசித்து வருபவர் முனுசாமி(65), ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது மனைவி கோவிந்தம்மாள், அரசு பள்ளி ஆசிரியை. பொதுவான வழிப்பாதையை இரு பகுதியை சேர்ந்தவர்களும், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். முனுசாமியின் வீட்டை ஒட்டி 20 ஆண்டுக்கு முன்பு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கருதிய முனுசாமி, அதனை சற்று தள்ளி வைக்க வேண்டுமென விண்ணப்பித்துள்ளார். அதன்பேரில், தர்மபுரி மின்வாரிய அதிகாரிகள், நேற்று முன்தினம், முனுசாமியின் வீட்டிற்கு அருகிலேயே, மற்றொரு இடத்தில் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், சேலம் -தர்மபுரி பைபாஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். மேலும், புதிய மின்கம்பம் நடுவதை தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியை கோவிந்தம்மாளை, பெண் போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, மற்றொரு இடத்தை தேர்வு செய்து, மின்கம்பம் நடும் பணி நடந்தது. இதனிடையே தடங்கம் விஏஓ கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியலில் ஈடுபட்டதாக, ராயல்நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ரத்தினவேல், செயலாளர் பழனிவேல், பொருளாளர் சுதாராணி மற்றும் நிர்வாகிகள் மீது, அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: