மலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும்

ஊட்டி, மே 20: மலர் கண்காட்சியை காண நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என எஸ்பி ஆசிஷ்ராவத் கேட்டுக் கொண்டுள்ளார். கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்து செல்கின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் மலை பாதையில் வேகமாக வாகனங்களை ஓட்டி செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மலை பாதைகளில் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்பி ஆசிஷ்ராவத் கூறியதாவது: சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். அதேபோல், செல்போனில் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்க கூடாது. மேலிருந்து கீழ் நோக்கி செல்லும் வாகனங்கள், கட்டாயமாக மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும்.

வளைவுகளில் முந்திக் கொண்டு செல்லக் கூடாது. காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவுரை பலகைகளில் உள்ளது போல் வாகனங்களை இயக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மலைப்பாதையில் வேகமாக வாகனங்களை இயக்க கூடாது. சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: