அதிசுவை பாரம்பரிய இயற்கை அங்காடி

தர்மபுரி, மே 14: தர்மபுரி அருகே, புதிய அதிசுவை பாரம்பரிய இயற்கை அங்காடி திறப்பு விழா நேற்று நடந்தது. அங்காடியை திறந்து வைத்து கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், பாலக்கோடு கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் மற்றும் தர்மபுரி வட்டாரம் ஆகிய 4 வட்டாரங்களுக்கு உட்பட்ட 802 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி “அதிசுவை” பிராண்ட் என்ற பெயருடன் அப்பொருட்களை விற்பனை செய்வதற்கு, தனியாக விற்பனை அங்காடியை அமைத்துள்ளது. இந்த அங்காடியில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலை, எள் மற்றும் தேங்காய் போன்ற எண்ணெய் வித்துகள், சாமை, திணை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற தானிய ரகங்கள், மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம், கருப்பு கவுணி பல்வேறு வகையான எண்ணெய் வகைகள் உள்ளிட்டவற்றை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி “அதிசுவை” பிராண்ட் என்ற பெயருடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அங்காடியில் இயற்கையாக விளைந்த சிறு தானியங்கள், பாரம்பரிய அரிசி ரகங்கள், நாட்டு காய்கறி விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் உறுப்பினர்களுக்கு, கால்நடை தீவனமும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலினி, தாசில்தார் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: