ஊட்டியில் காற்றுடன் சாரல் மழை குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி, மே 13: ஊட்டியில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்ததால் குளிர் அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். பின், நவம்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும். அதன்பின், மழை இருக்காது. மே மாதம் வரை வெயில் காணப்படும். ஆனால், இம்முறை கடந்த மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் எந்நேரமும் மேக மூட்டம் காணப்படுகிறது. மேலும், அவ்வப்போது இடியுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் காற்றும் வீசி வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர் அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர் அதிகமாக காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. குளிர் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வெம்மை ஆடைகளுடன் வலம் வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால், ரோஜா காட்சி மற்றும் மலர் கண்காட்சி பாதிக்கும் அச்சத்தில் தோட்டக்கலைத்துறையினர் உள்ளனர்.

Related Stories: