கரூரில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 51 பயனாளிகளுக்கு ரூ.14லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

கரூர், ஏப். 26: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 51 பயனாளிகளுக்கு ரூ. 14லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டு மனைப்பட்டா, வேலை வாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு 402 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 53 மனுக்கள் பெறப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு வந்த கலெக்டர், கோரிக்கை ம னுக்களை பெற்றுக் கொண்டதோடு, துறை அதிகாரிகளிடம் வழங்கி, ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் விபத்து மரணம் உதவித்தொகை 2 நபர்களுக்கு தலா ரூ. 50ஆயிரம், இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித்தொகை தலா ரூ. 17ஆயிரம் வீதம் 18 நபர்களுக்கும், ஒரு நபருக்கு ஊன்றுகோல், ஒரு நபருக்கு அலைபேசி, 11 நபர்களுக்கு தையல் எந்திரங்கள், வருவாய்த்துறை மூலம் 6 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், இரண்டு நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களும், கூட்டுறவுத்துறையின் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ. 9லட்சம் மதிப்பில் கடன் தொகைகளையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 4வது தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான கபாடி போட்டியில பங்கு பெற உள்ள நந்தகுமார் மற்றும் அன்பழகன் ஆகியோருக்கு தலா ரூ. 10ஆயிரம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என 51 நபர்களுக்கு ரூ. 14லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: