அரூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்ட தம்பதி

அரூர், மார்ச் 5: அரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் திமுக- 7 இடங்களை, அதிமுக- 7ம், பாமக- 2, சுயேட்சை- 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால் தலைவர் பதவிக்கு அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சியினரும் சுயேட்சை மற்றும் பாமகவினின் வாக்குகளை பெற கடும் முயற்சி செய்தனர். கடும் பரபரப்பிற்கு இடையே, நேற்று காலை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் அதிமுகவின் ஒரு வாக்கு உள்பட 12 வாக்குகள் பெற்று, தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த இந்திராணி தனபால் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட நிவேதா 6வாக்குகள் பெற்றார். இதனையடுத்து திமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளரும், தலைவர் இந்திராணியின் கணவருமான சூர்யா தனபால் போட்டியின்றி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பேரூராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கலைராணி, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories: