கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் குகைவழிப்பாதையில் தேங்கிய தண்ணீரை அகற்ற கோரிக்கை

கரூர், ஜன. 19: கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் உள்ள குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட இனாம்கரூர், குளத்துப்பாளையம் மற்றும் பெரியகுளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கரூர் நகரம், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம் போன்ற பகுதிகளுக்கு எளிதில் செல்லும் வகையில் ஈரோடு ரயில் தண்டவாளப் பாதையின் கீழ் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்த குகை வழியின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மழைக்காலம் மட்டுமின்றி, அவ்வப்போது குகை வழிப்பாதையின் உட்புறம் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தண்ணீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்  என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: