கொரோனா பரவலை தடுக்க சுற்றுலா தலங்களில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிப்பு

ஊட்டி: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை துவங்கியுள்ளது. தற்போது, கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடாத வகையில் வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் தற்போது கொரோனா கட்டுப்படுத்தலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், தடுப்பூசிகளை அதிகரிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது, அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைத்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி ெசலுத்தும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஒரு மருத்துவர் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா? என கேட்டறிந்து, செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் பலரும் தற்போது தாவரவியல் பூங்காவில் உள்ள முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

Related Stories: