கொரோனா ஸ்கிரீனிங் சென்டர் மீண்டும் துவக்கம்

ஈரோடு: ஈரோட்டில் கொரோனா ஸ்கிரீனிங் சென்டர் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் பாதிப்பு தன்மையை அறிய ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா ஸ்கிரீனிங் சென்டர் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் குறைந்தவுடன் ஸ்கிரீனிங் சென்டர் மூடப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், ஈரோடு மாநகராட்சி சார்பில் மீண்டும் ஸ்கிரீனிங் சென்டர் துவங்கப்பட்டது. இது நேற்று காலை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் வரவழைத்து தீவிர பரிசோதனை செய்து, அதிகம் பாதிப்படைந்தவர்களை அரசு மருத்துவமனையிலும், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற அறிவுறுத்தி, அனுப்பி வைத்தனர். மேலும், குறைந்தளவு பாதிப்புக்குள்ளானவர்களை பரிசோதனைக்கு பின் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தினர்.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறியதாவது: புதிதாக மீண்டும் துவங்கப்பட்டுள்ள மாநகராட்சி ஸ்கிரீனிங் சென்டரில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை உள்ளிட்ட 5 வகையான பரிசோதனை செய்யப்படும். இதில், தொற்று குறைவாக உள்ளவர்களை 7 நாள் வீட்டு தனிமையில் இருக்க பரிந்துரைக்கப்பட்டு, அவர்கள் வீடுகளை மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்படும்.

அதிக தொற்று பாதிப்பு உள்ளவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை அல்லது ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிப்போம். கடந்த முறை ஆக்சிஜன் படுக்கை வசதிகள் பற்றாக்குறை இருந்தது.

நடப்பாண்டில் அதுபோன்ற பிரச்னை இருக்காது. ஈரோடு அரசு மருத்துவமனையில் மட்டும் 200 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி ஈரோடு மாநகராட்சி ஸ்கிரீனி்ங் சென்டருக்கு வந்து தங்களது பாதிப்பு தன்மை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை மேற்கொண்டு குணமடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: