பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.28: தர்மபுரி மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், காலி பணியிடங்களை நிரப்பகோரி பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் நாத் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கல்யாணசுந்தரம், வட்ட பொருளாளர் முரளி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், பட்டுவளர்ச்சித்துறையில் உள்ள 500க்கும் மேற்பட்ட இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை தவிர்க்க வேண்டும். ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கும், தாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும். நுழைவு நிலை பணியிடத்தை உதவி ஆய்வாளர் பணியிடமாக மேம்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Related Stories: