ஜனவரி 1ம் தேதி முதல் ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை

தர்மபுரி, டிச.23: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் உத்தரவின்படி, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்தும் விதமாக, புத்தாண்டு (ஜனவரி 1ம் தேதி) முதல் சுற்றுலாப்பகுதியான ஒகேனக்கல், “பிளாஸ்டிக் மாசில்லா” பகுதியாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த தடை உத்தரவை, அப்பகுதி மக்கள், சுற்றுலாப்பயணிகளின் ஆதரவுடன் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சிற்றுண்டி கடைகள், அங்காடிகள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஒகேனக்கல் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, உள்ளாட்சி விதிகளுக்குட்பட்டு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: