நிலுவையில் உள்ள விவரங்களை சரிபார்ப்பதற்காக கோவை, திருப்பூரில் 17ம் தேதி வரை ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு முகாம்

பீளமேடு, டிச. 8: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள்  ஆயத்த ஆடைகள், ஜவுளி பொருட்கள், என்ஜினீயரிங் பொருட்கள் பல்வேறு வகையான பொருட்கள் உலக  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அவர்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு எத்தனை சதவீதம்  ஜிஎஸ்டி செலுத்தி பொருட்களை தயாரிக்கிறார்களோ அத்தனை சதவீத வரியையும் ஏற்றுமதியாளர்கள்  மத்திய அரசிடமிருந்து ரீபண்டாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால், உள்நாட்டில் ஏற்றுமதியாளர்களின் சப்ளையர்கள் அரசுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதில்லை. இது ஏற்றுமதியாளர்களின் கணக்கில்  நிலுவைத் தொகையாக இருக்கும். அடுத்து அந்த ஏற்றுமதியாளர் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. இது தொடர்பாக கோவை மண்டல ஜிஎஸ்டி முதன்மை ஆணையாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மண்டல தலைமை ஆணையாளரின் ஆளுகைக்கு உட்பட்ட குன்னூர், பொள்ளாச்சி மற்றும்  திருப்பூரில் உள்ள அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தலைமை  அலுவலகத்திலும் வருகிற 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஏற்றுமதியாளர்கள் மற்றும் அவர்களின்  சப்ளையர்களுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் ஏற்றுமதியாளர்கள், சப்ளையர்கள் அளிக்கும்  விவரங்களுடன் ஜிஎஸ்டி அலுவலகத்தில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்படும். இதில் வரி நிலுவையில்  இருப்பது தெரியவந்தால் சப்ளையர் செலுத்த வேண்டிய வரியை ஜிஎஸ்டி அலுவலகமே வசூலித்துக் கொள்ளும். இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் செலுத்திய ஜிஎஸ்டி திரும்ப (ரீபண்ட்) கிடைப்பதில் உள்ள காலதாமதம் நீக்கப்படும். மேலும் அவர் அடுத்து எந்த சிரமமும் இன்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய வழி  ஏற்படும். எனவே இந்த சிறப்பு முகாமை ஏற்றுமதியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: