மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

கோவை, டிச.8:  கோவை ஆர்.எஸ் புரம் தடாகம் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார் (18). கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர் ஒருவருடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.  ஏ.கே. எஸ் நகர் அருகே சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான குகனேஸ்வரன் (21) என்பவர் நின்று கொண்டிருந்தார். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது. தினேஷ்குமார், குகனேஸ்வரனிடம் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் தன்னிடம் பணமில்லை, மதுவாங்கி தர முடியாது எனக்கூறியுள்ளார். இதை நம்பாத தினேஷ்குமார், அவரது பாக்கெட்டில் கை விட்டு பணம் இருக்கிறதா? என பார்க்க முயன்றார்.

 இதில் கோபமடைந்த குகனேஸ்வரன், என் பாக்கெட்டில் ஏன் கை விடுகிறாய்? எனக்கு பணம் கொடுத்து வைத்திருந்தாயா?, உனக்கு எதுக்காக மதுவாங்கி தரவேண்டும்? எனக்கூறி கண்டித்தார். அப்போது தினேஷ்குமார் அவரிடம் வாக்குவாதம் செய்து தகாத முறையில் பேசினார். ஆத்திரமடைந்த குகனேஸ்வரன் தான் வைத்திருந்த கத்தியால் தினேஷ்குமார் கழுத்தில் குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிந்து குகனேஷ்வரனை கைது செய்தனர்.

Related Stories: