தனியார் மில்லில் இளம்பெண் மீது தாக்குதல்

கோவை, டிச.7: கோவை தனியார் மில்லில் இளம்பெண் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மாதர் சங்கத்தினர், சிஐடியு-வினர் மனு அளித்தனர்.கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் பலர் மனுக்களை வழங்கினர். இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘‘கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை கூடுதல் நேரம் பணி செய்ய மறுத்ததால், நிர்வாக ஊழியர்கள் வைத்து பெண்கள் தங்கும் விடுதிக்குள் நுழைந்து பெண்ணை இரும்பு தடியால் அடித்து கொடுமை செய்து, மிரட்டும் வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது.

இது போல் பல மில்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை இருந்து வருகிறது. எனவே, பெண்கள் பணியாற்றும் இடங்களில் ஐசிஐசி கமிட்டி (பெண்கள் பாதுகாப்பு விசாரணை ஆணையம்) அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணை கடுமையாக தாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என தெரிவிக்கப்பட்டிருந்து. சிஐடியு சார்பில், இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவத்தில் மில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். சமூக நீதிக்கட்சி சார்பில் அம்பேத்கர் முகமுடி அணிந்து வந்து, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகம் அல்லது நீதிமன்றம் எதிரில் அம்பேத்கர் சிலையை வைக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர், டாஸ்மாக் கடைகளில் நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்கக்கோரி மனு அளித்தனர். இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், பேரூர் செட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் கிறிஸ்துநாதர் ஆலயம், அனுமதியின்றி மாத பிரசாரம் செய்கின்றனர்.

தற்போது, விரிவாக்கம் என்ற பெயரில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற தற்காலிக பணியாளர்கள், இந்த மாதம் முதல் பணியில் இருந்து நீக்கப்பட்ட தங்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என கூறி மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு சரியாக வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை வழங்க கோரி மனு அளித்தனர். வால்பாறை பகுதி மலைவாழ் மக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மனு அளித்தனர்.

Related Stories: