அரசு தலைமை மருத்துவமனையில் ஒமிக்ரான் சிகிச்சை பிரிவில் அனைத்து வசதிகளும் தயார்

தர்மபுரி, டிச.5: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று தனி வார்டை மருத்துவர்களுடன் ஆர்எம்ஒ ஆய்வு செய்தார்.கர்நாடகா மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தினசரி ரயில், பஸ்கள் மூலம் ஏராளமான பணியாளர்கள், தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். லட்சக்கணக்கான நபர்கள் அங்கு தங்கியிருந்து பணியாற்றுகின்றனர். இதில் பலர் வாரந்தோறும் சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். இதனால், கர்நாடகாவில் இருந்து தர்மபுரிக்குள் ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3வது மாடியில், 30 படுக்கை கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை மருத்துவர் குமரராஜா தலைமையில் 10 மருத்துவர்கள், 10 செவிலியர்கள், தேவையான மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒமிக்ரான் வார்டில் படுக்கைகள் மற்றும் தேவையான வசதிகள் சரியாக உள்ளதா என்பதை அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் (ஆர்எம்ஓ) காந்தி, மருத்துவர்களுடன் வந்து ஆய்வு மேற்கொண்டார். தற்போது நோயாளிகள் யாரும் இல்லாததால், அந்த வார்டை பூட்டி வைத்துள்ளதாக ஆர்எம்ஓ காந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது,’ என்றார். இந்த ஆய்வின் போது, ஒமிக்ரான் வார்டு தலைமை மருத்துவர் குமரராஜா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Related Stories: