ஒரேநாளில் 2789 பேருக்கு உத்தரவு மாதந்தோறும் அடங்கல் வழங்க சிறப்பு முகாம்

தர்மபுரி, டிச.5: தர்மபுரி மாவட்டத்தில் 261 விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் 2780 விவசாயிகளுக்கு அடங்கல் வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் மாதந்தோறும் முதல் திங்கட்கிழமை சிறப்பு முகாம் நடக்கும் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, விவசாயிகள் பயிர்க்கடன் மற்றும் இதர காரணங்களுக்காக விஏஓக்களிடமிருந்து அடங்கல் மற்றும் இதர கிராம கணக்குகளின் நகல் பெறுவதற்கான காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்ற கலெக்டர், சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, கடந்த 2ம் தேதி மாவட்டத்தில் உள்ள 261 விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான அடங்கல் உள்ளிட்ட கிராம கணக்கு ஆவணங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினர். இந்த சிறப்பு முகாம்களின் மூலம், தர்மபுரி வட்டத்தில் 30 வருவாய் கிராமங்களில் 227 அடங்கல்களும், நல்லம்பள்ளி வட்டத்தில் 29 வருவாய் கிராமங்களில் 509 அடங்கல்களும், பாலக்கோடு வட்டத்தில் 45 வருவாய் கிராமங்களில் 372 அடங்கல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், காரிமங்கலம் வட்டத்தில் 33 வருவாய் கிராமங்களில் 437 அடங்கல்களும், பென்னாகரம் வட்டத்தில் உள்ள 36 வருவாய் கிராமங்களில் 305 அடங்கல்களும், அரூர் வட்டத்தில் 43 வருவாய் கிராமங்களில் 367 அடங்கல்களும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 45 வருவாய் கிராமங்களில் 563 அடங்கல்களும் என 7 வருவாய் வட்டத்தில் உள்ள 261 வருவாய் கிராமங்களில், 2780 அடங்கல்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் மாதந்தோறும் முதல் திங்கட்கிழமை, அனைத்து விஏஓ அலுவலகங்களிலும் அடங்கல் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Related Stories: