ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை உற்பத்தி செய்த செங்கற்களை விற்க அனுமதிக்க வேண்டும்

பெ.நா.பாளையம்,டிச.5:  கோவையில் ஆர்.டி.ஒ தலைமையில் செங்கல் சூளை உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏற்ககனவே உற்பத்தி செய்த செங்கற்களை விற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோவை தடாகம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கள் சூளைகள் செயல்பட்டு வந்தன. இவை அனைத்தும் கடந்த மார்ச் 19ம் தேதி முதல் செயல்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் தடையாணை பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து செங்கல் சூளைகள் செயல்படவில்லை. இந்நிலையில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக செங்கற்கள் லாரிகளில் ஏற்றிச்செல்லப்படுவதாக புகார்கள் வந்தன.

இதைக் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க வேண்டியும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகள் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.வருவாய் கோட்டாட்சியர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். கனிம வளத்துறை துணை இயக்குநர் சுரேஷ், ஆர்டிஓ அலுவலக தனி அலுவலர் சந்திரா, துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் பேசுகையில், ‘‘செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ளவர்கள் யாரும் இரவில் செங்கற்களை சட்டவிரோதமாக ஏற்றிச் செல்வதில்லை. அப்படி செல்பவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுங்கள். நாங்கள் இதற்கு ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால் ஏற்கனவே உற்பத்தி செய்துள்ள செங்கற்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். எங்கள் சூளைகள் மூலம் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்காக மெஷின்கள் மற்றும் லாரிகளை செங்கல்சூளைகளில் இருந்து எடுக்க அனுமதிக்க வேண்டும்.

குத்தகைக்கு விடப்பட்டு இருக்கின்ற சூளைகளை நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் செங்கல் சூளைகளுக்கு அளிக்கப்பட்ட நடைமுறைகளை எங்களுக்கு வழங்கி செங்கற் சூளைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். தற்போது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இங்குள்ள அரசு பள்ளிகளில் மாணவ சேர்க்கை  குறைந்துள்ளது. வேலை இழப்பு, உற்பத்தி நிறுத்தம் காரணமாக தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

இது குறித்து வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கூறும்போது, ‘‘உங்கள் கருத்துகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளோம். அரசின் செயல்பாட்டுக்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

Related Stories: