10 ஆண்டுகளாக தூர்வாரததால் தூர்ந்து போன தொப்பையாறு அணை நீர்வரத்து கால்வாய்கள்

நல்லம்பள்ளி, டிச.2: நல்லம்பள்ளி அருகே, கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாராததால் நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து போனதால், 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் அருகே 50 அடி உயரமுள்ள தொப்பையாறு அணை உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், தொப்பையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 49 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து, அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த 21ம் தேதி முதல் அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த உபரி நீரானது தொப்பையாறு வழியாக மேட்டூர் அணைக்கு சென்று அடைகிறது. தொப்பையாறு அணையில் இருந்து, விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக வலதுபுற கால்வாய் 17 கிமீ தொலைவு மற்றும் இடதுபுற கால்வாய் 24 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய்கள் மூலம் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள செக்காரப்பட்டி, தொப்பூர், வெள்ளாறு, மல்லிகுந்தம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தொப்பையாறு அணை மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. இதனால், தற்போது அணையில் தண்ணீர் நிரம்பியும், விவசாய நிலங்களுக்கு முறையாக தண்ணீர் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: