செங்கல் கடத்தலுக்கும் சங்கத்திற்கும் தொடர்பில்லை

பெ.நா.பாளையம்,டிச.2: கோவை சின்னத்தடாகத்தில் லாரிகளில் செங்கல் கடத்துவோர் மீது சட்டப்படியாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என அதன் தலைவர் சி.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சின்னத்தடாகத்தில் 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. பல்வேறு காரணங்களினால் இவை செயல்பட அரசும், சென்னை உயர்நீதி மன்றமும் தடைவிதித்துள்ளன. இதனால் கடந்த 9 மாதங்களாக  மூடிக்கிடக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான செங்கல்கள் தேக்கமடைந்து விற்பனை செய்ய இயலாமல் கிடக்கின்றன. வங்கிகளில் கடன் வாங்கி தொழில் நடத்தியோர் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

மீண்டும் இந்நிலையில் தொழில் நடத்த வாங்கிய கடனைக் கட்ட வேறு வருமானமின்மையால் சிலர் தேக்கமடைந்துள்ள செங்கல்களை இரவு நேரங்களில் லாரிகளில் ஏற்றிச் சென்று விற்பனை செய்கின்றனர். இவற்றை போலீசாரும் பிடித்து லாரியை பறிமுதல் செய்கின்றனர். இயலாமையின் காரணமாக செங்கல் சூளை உரிமையாளர்கள் சிலர் சட்டவிரோதமாக செய்யும் இதுபோன்ற செயல்பாடுகளால் மற்றவர்களுக்கும் பொதுமக்களிடையே அவப் பெயரை உண்டாக்கி விடுகிறது. சின்னத்தடாகத்தில் செங்கல் தொழிலை மீட்டெடுக்க சங்கமானது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு சின்னத்தடாகத்தில் யாரும் இனிமேல் செங்கல்களை விற்பனை செய்யக்கூடாது. லாரிகளில் சட்டவிரோதமாக கொண்டு செல்லவும்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் செயல்படுவோருக்கும், சங்கத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இவர்களுக்கு சங்கம் துணை நிற்காது. இதுபோன்ற சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவும் சங்கம் தகுந்த ஒத்துழைப்புகளை வழங்கும். தேவையில்லாமல் செங்கல் உற்பத்தியாளர்களுக்கும், சங்கத்திற்கும் அவப்பெயர் உண்டாகும் வகையில் அவதூறு பரப்பினாலோ, சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: