கரூரில் 2வது அலை பரவல் தீவிரம்

கரூர், ஏப். 20: கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தற்போது பரவி வருகிறது. இந்த பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நெறிமுறைகளை அரசு வகுத்து அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கருர் மாவட்டத்தில் இதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 2021ம் முதல் தற்போது வரை 1,411 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 1,38,673 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 48 ஆயிரம் நபர்களுக்கு தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 18ம்தேதி வரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27 ஆண்கள், 20 பெண்கள் என தொற்றால் பாதிக்கப்பட்டு 47 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15ம்தேதி முதல் தற்போது வரை கொரனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,393 பேருக்கு கரூர் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், அதிகப்படியான நபர்களுக்கு தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் வகையில் 1,000 படுக்கைகளுடன் கூடிய கொரோனா தொற்றாளர்களுக்கான 3 சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர் மற்றும் உணவு போன்றவைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு நெறிமுறைகள் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களும் நிலையை உணர்ந்து அனைவரும் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியில் பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தினமும் ஆய்வு மேற்கொண்டு குப்பைகள் தேங்காமலும், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி மிகுந்த கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், கரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுசாமிபுரம், திண்ணப்ப தியேட்டர் கார்னர், காமராஜ் மார்க்கெட், ஜவஹர் பஜார், மக்கள் பாதை, உழவர்சந்தை போன்ற பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, நிலையை உணர்ந்து, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

>