சிப்காட் அமையும் இடத்தில் டிரோன் கேமரா மூலம் சர்வே

தர்மபுரி, ஏப்.19: தர்மபுரி சிப்காட் தொழில்பேட்டை அமைக்கும் இடத்தில் வளர்ந்துள்ள மரங்கள் குறித்து, டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் சர்வே பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, தர்மபுரி ஒன்றியத்தில் தடங்கம், அதகப்பாடி, பாலஜங்கமனஅள்ளி, அதியமான்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய வகையில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க, 1733 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் 550 ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம். மீதமுள்ள 1183 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலமாகும். பட்டா நிலங்களை பெறுவதற்கு அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, பட்டா நிலங்கள் கைப்பற்றும் பணி நடந்து வருகிறது. 550 ஏக்கரில் 150 ஏக்கர் பட்டா நிலங்கள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ளவைகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக அரசு நிலத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில், தர்மபுரி சிப்காட் தொழில்பேட்டை பணியை தொழில்துறை ஆணைய துணை தலைவர் நீரஜ் மிட்டல் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

இந்நிலையில், தொழில்பேட்டை அமையவுள்ள இடத்தில், எத்தனை மரங்கள் உள்ளன என்று வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் சர்வே செய்து கணக்கு எடுத்து வருகின்றனர். சிறிய செடிகள் முதல் பெரிய மரங்கள் வரை லட்சகணக்கில் உள்ளன என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: முதல் கட்டமாக அரசு புறம்போக்கு நிலத்தில், தொழில்பேட்டை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் தேர்தலுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. அரசின் 1183 ஏக்கரில் மரங்கள் எத்தனை உள்ளன என சர்வே செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், வனத்துறை மூலம் 2006-2007 தாளப்பள்ளம் பகுதியில் 36 ஆயிரம் சிறு மற்றும் பெரிய மரம் செடிகளும், 2003- 2004 சிவசுப்பிரமணியநகர் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தில் 50 ஆயிரம் சிறிய, பெரிய மரக்கன்றுகளும், 2000-2001 காட்டூர் மாரியம்மன்கோயில் பலவகை தோட்டம் 30ஆயிரம் மரச்செடிகளும் உள்ளன. சுமார் 1.18 லட்சம் சிறிய, பெரிய மரக்கன்றுகள் இருப்பதாக தெரியவந்துள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>