பாலக்கோடு அருகே கோமாரி நோய் மூலிகை மருந்து குறித்து விளக்கம்

தர்மபுரி, ஏப்.19:  பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி கிராமத்தில், கோமாரி நோய் மற்றும் கழிச்சல் நோய்க்கான மூலிகை மருத்துவம் குறித்து செயல் விளக்கப்பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமில், ஓசூர் அதியமான் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள், கோமாரி நோய் மற்றும் கழிச்சல் நோய்க்கான மூலிகை மருத்துவம் குறித்தும் மற்றும் மாவு பொருட்களால் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். அப்போது கல்லூரி மாணவர்கள் பேசியதாவது: கோமாரி நோயை கட்டுபடுத்த 10 கிராம் மிளகு, 10 கிராம் வெந்தயம், 10 கிராம் சீரகம் ஆகியவற்றை சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, பின்னர் இவற்றுடன் 10 கிராம் மஞ்சள் தூள், 4 பல் பூண்டு, 100 கிராம் வெள்ளம் சேர்த்து அரைத்து, தேங்காய் துருவல் சேர்த்து கையினால் பிசைந்து நாள் ஒன்றுக்கு மூன்று முறை வீதம், 5 நாட்களுக்கு உள் மருந்தாக கொடுக்கவும்.

கால் புண் நீக்க பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 10 கிராம், துளசி 10 இலை, குப்பை மேனி 10 இலை, மருதாணி 10 இலை, வேம்பு 10 இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து, நல்லெண்ணெய் விட்டு கொதிக்க வைத்து பின் ஆற வைத்து மேல் பூச்சாக புண் உள்ள இடத்தில் உபயோகப்படுத்தவும்.கழிச்சல் நோய் வந்த பசுவின் உடலிலுள்ள நீர்ச்சத்து மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக வெளியேறி, சோர்ந்து காணப்படும். இதை குணப்படுத்த சின்ன சீரகம், கசகசா, வெந்தயம், மிளகு, மஞ்சள், பெருங்காயம் சேர்த்து கருகும் வரை அரைத்து, நீர்தெளித்து இடித்து கொள்ள வேண்டும். வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கருப்பட்டி சேர்த்து தனியாக அரைத்து கொள்ளவும். பின்னர், இந்த இரண்டு கலவையை சேர்த்து சிறு உருண்டைகளாக பிடித்து மாட்டின் நாக்கில் தடவியவாறு உள்ளே செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த முகாமில், விவசாயிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: