பொதுமக்கள் அச்சம் பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் அமைக்கும் பணி

கரூர், ஏப்.18: கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கரூர் நகரப் பகுதியில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை, தாந்தோணிமலை அரசு கல்லூரி ஆகிய பகுதிகளில் படுக்கை வசதிகள் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: கொரோனா தொற்றின் காரணமாக இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதிகளவிலான நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகளும், தாந்தோணிமலை அரசு கல்லூரி பகுதியில் 300 படுக்கை வசதிகளும், புலியூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளும், மேலும் கூடுதலாக 200 படுக்கை வசதி அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை பிரிவுகளை அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.

கட்டில்கள், மெத்தைகள், படுக்கையில் அமைக்கப்படும் விரிப்புகள், தலையணைகள் போதியளவில் இருப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்து என்னென்ன தேவை என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். தேவையான பொருட்களை உடனே வாங்கி நாளைக்குள் (திங்கட்கிழமை)1000 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் இருக்கும் வகையில் பணிகள் முடிக்க வேண்டும். அனுமதியளிக்கப்படும் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள், கழிப்பிடம், குடிநீர் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆய்வக பணியாளர்கள், உயிர்மருத்துவக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவோர் என 24மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் குழுக்களை அமைக்க வேண்டும். பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள், கையுறைகள் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்க வேண்டும். கொரோனா தொற்று சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அரசின் நெறிமுறைகளின்படி சத்தான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் அளிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமையின் திட்ட இயக்குநர் பாலகணேஷ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்தோஷ், நகராட்சி கமிஷனர் சுதா உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

Related Stories:

>