மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை

தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போட வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து,  கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில், ஆங்காங்கே சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போடுவதற்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரூர் அரசு மருத்துவமனை, தர்மபுரி நகர ஆரம்ப சுகாதார நிலையம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, ஜக்கசமுத்திரம், தீர்த்தமலை, சின்னகுப்பம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி பழைய எண்ணிக்கையில் மருத்துவமனைகளுக்கு வழங்குகிறோம். ஆனால் தடுப்பூசி போட மக்களிடம் ஆர்வம் அதிகம் ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களை ஒருநாள் கழித்து வரும்படி அனுப்பி வருகிறோம். தேவையான அளவுக்கு மக்களுக்கு போட கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பு உள்ளது. இருப்பினும் அரசிடம் கூடுதலாக தடுப்பூசி கேட்டுள்ளோம்,’ என்றனர்.

Related Stories: