மணவாடி பகுதியில் மின் விளக்குகள் எரியாத குகை வழிப்பாதை: அச்சத்துடன் கடந்து செல்லும் மக்கள்

கரூர், ஏப்.14: மணவாடி பகுதியில் இருந்து உப்பிடமங்கலம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் குகை வழிப்பாதையில் மின் விளக்குகள் எரிய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர்-திண்டுக்கல் வெள்ளியணை சாலையில் மணவாடி பகுதியில் இருந்து கத்தாளப்பட்டி, உப்பிடமங்கலம் போன்ற பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையில் குறிப்பிட்ட தூரத்தில், திண்டுக்கல் கரூர் ரயில்வே தண்டவாள பாதை குறுக்கிடுவதால் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தபோது, மின் விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் மக்கள் இதன் வழியாக செல்வதற்கு மிகவும் அச்சப்பட்டு வந்தனர். மேலும், மின் விளக்கு வசதி அமைத்து தரவும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.

இதனடிப்படையில், சில மாதங்களுக்கு முன்பு குகை வழிப்பாதையில் எல்இடி வடிவிலான மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. தற்போது ஒரு சில வாரங்களாக, மின் விளக்குகள் எரியாததால் திரும்பவும் மக்கள் இதனை கடந்து செல்வதற்கு அஞ்சி வந்தனர். மேலும், இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில் மின் விளக்குகள் சரி செய்யும் பணியில் நேற்று பணியாளர்கள் ஈடுபட்டனர்.

எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் குகை வழிப்பாதையில் நடைபெறாத வகையில் அனைத்து பிரச்னைகளையும் சீர் செய்து சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை நிரந்தரமாக மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: