மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தர்மபுரி, ஏப்.13: தர்மபுரி மாவட்டத்தில் 60ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலரும், தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக துணை தலைவருமான நீரஜ் மிட்டல், நேற்று தர்மபுரிக்கு வருகை தந்தார். அவர் தடங்கம் தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம், பென்னாகரம் நல்லானூர் ஜெயம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், மாட்லாம்பட்டியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மதிகோன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா வைரஸ், காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கலெக்டர் கார்த்திகா, எஸ்பி பிரவேஸ்குமார் மற்றும் அரசு துறைஅதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது, கண்காணிப்பு அலுவலர் நீரஜ் மிட்டல் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், 45 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் 100 பேருக்கு மேல் பணி புரிந்தால், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று தடுப்பூசி வழங்கும் வகையில், கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா மையங்களில் 200 படுக்கை வசதி, குடிநீர், கழிவறை போன்றவற்றை ஏற்படுத்தி இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட வேண்டும்.

தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே, 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. எதிர்வரும் 15 நாட்கள் நாம் கொரோனா விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க, எந்தவித அச்சமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் 60ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தவறாமல் குறித்த தேதியில் 2ம் கட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், தர்மபுரி பேருந்து நிலைய கடைவீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு சென்று, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்து கூறினார். அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில்  அவர் கலந்து கொண்டு பேசினார்.

Related Stories: