மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொபைல் தடுப்பூசி திட்டம் நாளை துவக்கம்

கோவை, ஏப். 10: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் மொபைல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் அதிகபட்சமாக 427 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் தினமும் 180 முதல் 220 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முக கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். அதேபோல், காய்கறி கடைகள், சலூன்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் கட்டாயம் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கடைகள், வணிக வளாகங்களில் பல்ஸ் ஆக்சி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை வைத்து வாடிக்கையாளர்கள் வரும் போது அவற்றை வைத்து பரிசோதனை செய்த பின்னர் தான் உள்ளே அனுமதிக்க வேண்டும்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள் போன்றவை  பூட்டி சீல் வைக்கப்படும்.

திருமணம், விசேஷங்களில் கூட்டம் கூடக்கூடாது. ஏற்கனவே, உள்ள விதிமுறைகளின்படி 50 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் மாநகராட்சி சார்பாக கடுமையாக்கப்பட்டுள்ளன. அதேபோல், கொரோனா பரிசோதனைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இலவசமாக எடுக்கப்படுகிறது.

அதேபோல், தடுப்பூசியும் போடப்படுகிறது. தடுப்பூசியை எல்லாரும் முன் வந்து போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மொபைல் தடுப்பூசி திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. வாகனத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டு மாநகராட்சி தெருக்களுக்கு சென்று அங்கேயே அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இந்த திட்டம் (11ம் தேதி) நாளை முதல் துவங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. மண்டலத்திற்கு ஒரு வாகனம் வீதம் 5 வாகனங்களில் இந்த மொபைல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வாகனமும் மண்டல வாரியாக சென்று கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள தெருக்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்குள்ளவர்களில் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும்.

 இதுதவிர விருப்பம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படாது’’ என்றார்.

Related Stories: