தேர்தல் முடிந்ததால் பறக்கும்படை சோதனை நிறைவு

தர்மபுரி, ஏப்.9: தர்மபுரி மாவட்டத்தில், தேர்தல் முடிந்ததால் பறக்கும்படை சோதனை நிறைவு பெற்றது. பணம், நகை எடுத்துச் செல்ல கட்டுப்பாடு நீங்கியது.தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வந்தனர். தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற 6ம் தேதி வரை, பறக்கும் படையினர் கண்காணித்து பணம் பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல், எடுத்து வரப்பட்ட பணமும் பொருட்களும் வாக்காளர்கள் கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் பொருட்கள் என ₹90 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யபட்டிருக்கும்.196 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிந்து மறுநாள் முதல் அதாவது நேற்று முன்தினம், தேர்தல் பறக்கும்படை சோதனை விலக்கிக் கொள்ளப்படும். பணம், நகை கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் இனி இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். அதன்படி, தர்மபுரி மாவட்டம் முழுவதும் 96 தேர்தல் பறக்கும் படை குழு நேற்று முன்தினம் கலைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் உள்ளாட்சித்துறை, வேளாண், தோட்டக்கலைத்துறை, நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த அதிகாரி, ஒரு போலீஸ் எஸ்ஐ, 2 ஆயுதப்படை போலீசார் ஒரு வீடியோகிராபர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தகரீதியாக பயன்பாட்டுக்கு பணத்தை எடுத்துச் சென்ற வணிகர்களும், வியாபாரிகளும் தான் பறக்கும் படையினர் சோதனையில், அதிக பிரச்னைகளை சந்தித்தனர். தேர்தல் பறக்கும் படையினர் சோதனை காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததால் இதுவரையில் பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன தணிக்கையை தொடங்கினர். மீண்டும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த உள்ளனர். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணியாமல் வந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்று தகவல் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: