தர்மபுரி எஸ்வி ரோட்டில் குப்பைக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் கடும் அவதி

தர்மபுரி, ஏப்.7: தர்மபுரி எஸ்வி ரோடு தனியார் கார் ஸ்டாண்ட் அருகே குவிக்கப்பட்டுள்ள குப்பைக்கு தீ வைப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

தர்மபுரி எஸ்வி ரோடு தனியார் கார் ஸ்டாண்ட் அருகே சாலையோரத்தில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுகிறது. தினசரி கொட்டி மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. நேற்று மர்மநபர்கள் குப்பைக்கு தீ வைத்து விட்டு சென்றனர். இதனால் எஸ்வி ரோட்டில் மக்கள் செல்ல முடியாத வகையில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் மக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த சிலநாட்களாக நகராட்சி மயானத்தில் குப்பைகள் கொட்டி தீவைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. அதன்பின் அதே வரிசையில் கல்லறை தோட்டம் அருகே குப்பைகளை குவித்து தீ வைத்தனர். நேற்று எஸ்வி ரோடு தனியார் கார் ஸ்டாண்ட் அருகே குப்பைகளை குவித்து தீ வைத்துள்ளனர். இந்த மூன்று இடத்திலும் தெரிந்த நபர்களே குப்பைகளை கொட்டி அடிக்கடி தீ வைக்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட  நிர்வாகம் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: